கார்த்தி சிதம்பரத்தை 26-ந் தேதி வரை கைது செய்ய அமலாக்கப்பிரிவுக்கு இடைக்கால தடை : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கார்த்தி சிதம்பரம் கைது

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், ரூ.305 கோடி அன்னிய முதலீடு பெற அனுமதி வழங்கப்பட்டதில், முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ.யும், மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
 
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த மாதம் 28-ந் தேதி கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், விசாரணைக்கு பின்னர், சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவின் பேரில் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
 
22-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
 
இதற்கிடையே, அமலாக்கப்பிரிவு இதே வழக்கில் தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கார்த்தி சிதம்பரத்தை வருகிற 20-ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணையை 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.
 
இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் தரப்பில் இந்த வழக்கில் வாதாடும் வக்கீல்கள் வருகிற 20-ந் தேதி வேறு வழக்குகளில் ஆஜராக வேண்டியிருப்பதால், அந்த விசாரணையை மேலும் இரு நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் ஐகோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் எஸ்.முரளிதர், ஐ.எஸ்.மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, 20-ந் தேதி நடைபெற இருந்த விசாரணையை 22-ந் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, அதுவரை கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.
 
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
 
இதற்கிடையே, அமலாக்கப்பிரிவு தரப்பில் கார்த்தி சிதம்பரத்தை 20-ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கப்பிரிவின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கப்பிரிவின் சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார்.
 
கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனுசிங்வி ஆகியோர் வாதாடுகையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யாமல் கைது செய்ய சட்டத்தில் இடமில்லை என்றும், அதனால் அமலாக்கப்பிரிவு அனுப்பி இருக்கும் சம்மனை ரத்து செய்து கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
 
கைது செய்ய தடை
 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு வருகிற 26-ந் தேதி விரிவான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியதுடன், அதுவரை கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
 
மேலும் ஏற்கனவே இது குறித்து டெல்லி ஐகோர்ட்டில் விசாரணையில் இருந்து வரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு மாற்றியும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
 
Posted in Blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *